[24:62]

அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.

[24:63]

(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

[24:64]

வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.

Al-Furqân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[25:1]

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.

[25:2]

(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.