[25:33]

அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.

[25:34]

எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.

[25:35]

மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.

[25:36]

ஆகவே நாம், "நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்" என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.

[25:37]

இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.

[25:38]

இன்னும் 'ஆது' 'ஸமூது' (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).

[25:39]

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.

[25:40]

இன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.

[25:41]

இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான் (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.

[25:42]

நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார் (என்றும் அவர்கள் கூறுகின்றனர் (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.

[25:43]

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?