[25:44]

அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.

[25:45]

(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.

[25:46]

பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.

[25:47]

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

[25:48]

இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.

[25:49]

இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.

[25:50]

அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

[25:51]

மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.

[25:52]

ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.

[25:53]

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

[25:54]

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.

[25:55]

இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர் நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.