[25:68]

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

[25:69]

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

[25:70]

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

[25:71]

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.

[25:72]

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

[25:73]

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)

[25:74]

மேலும் அவர்கள்; "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

[25:75]

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

[25:76]

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.

[25:77]

(நபியே!) சொல்வீராக "உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்."