[26:61]

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

[26:62]

அதற்கு (மூஸா), "ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்" என்று கூறினார்;.

[26:63]

உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.

[26:64]

(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.

[26:65]

மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.

[26:66]

பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.

[26:67]

நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.

[26:68]

(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

[26:69]

இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

[26:70]

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது,

[26:71]

அவர்கள்; "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.

[26:72]

(அதற்கு இப்றாஹீம்) கூறினார் "நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

[26:73]

அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவும் கேட்டார்)

[26:74]

(அப்போது அவர்கள்) இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள்.

[26:75]

அவ்வாறாயின், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கூறினார்.

[26:76]

நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).

[26:77]

நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).

[26:78]

அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

[26:79]

அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்."

[26:80]

நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

[26:81]

மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்."

[26:82]

நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

[26:83]

இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!"