[27:23]

நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

[27:24]

அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

[27:25]

வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?

[27:26]

அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது கூறிற்று).

[27:27]

(அதற்கு ஸுலைமான;) "நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்" என்று கூறினார்.

[27:28]

என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி (என்று கூறினார்).

[27:29]

(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: "பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது."

[27:30]

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று (துவங்கி) இருக்கிறது.

[27:31]

நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).

[27:32]

எனவே பிரமுகர்களே! "என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீ;ங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று கூறினாள்.

[27:33]

நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

[27:34]

அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.

[27:35]

ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.