[27:45]

தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை "நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்" (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.

[27:46]

(அப்போது அவர்) "என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கப்மாட்டீர்களா?" எனக் கூறினார்.

[27:47]

அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர் கூறினார்; "உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்."

[27:48]

இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிந்தார்கள்.

[27:49]

அவர்கள்; "நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!" பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) "உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்" என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).

[27:50]

(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.

[27:51]

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.

[27:52]

ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.

[27:53]

மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.

[27:54]

லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; "நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?" என்று கூறினார்.

[27:55]

நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள் (என்றும் கூறினார்).