[28:29]
ஆகவே
மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன்
பயணம் செய்து கொண்டிருந்த
போது 'தூர்' (மலையின்)
பக்கத்தில் ஒரு
நெருப்பைக் கண்டார்; அவர்
தம் குடும்பத்தாரிடம் "நீங்கள்
(இங்கு சிறிது)
தங்குங்கள்; நிச்சயமாக, நான்
ஒரு நெருப்பைக் காண்கின்றேன்.
நான் உங்களுக்கு
அதிலிருந்து ஒரு
செய்தியையோ, அல்லது
நீங்கள் குளிர்
காயும் பொருட்டு, ஒரு நெருப்புக்
கங்கையோ கொண்டு
வருகிறேன்" என்று கூறினார்.
[28:30]
அவர்
நெருப்பின் அருகே
வந்த போது, (அங்குள்ள)
பாக்கியம் பெற்ற
அப் பள்ளத்தாக்கிலுள்ள
ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து "மூஸாவே!
நிச்சயமாக நானே
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய
அல்லாஹ்!" என்று
கூப்பிடப்பட்டார்.
[28:31]
உம்
கைத்தடியைக் கீழே
எறியும் என்றும்
(கட்டளையிடப்பட்டார்.
அவ்வாறு எறிந்ததும்)
அது பாம்பைப் போன்று நெளிவதைக்
கண்டு, அவர் திரும்பிப்
பார்க்காமல் பின்
வாங்கி ஓடினார்; (அப்பொழுது); "மூஸாவே!
முன்னோக்கி வாரும்!
இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம்
பெற்றவர்களில்
உள்ளவர்."
[28:32]
உம்
கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி
மிக்கதாய், மாசற்ற
வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை
உம்முடைய கைகளை
உம் விலாவில் சேர்த்துக்
கொள்ளுங்கள் - இவ்விரண்டும்
ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய
பிரதானிகளுக்கும்
உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட
இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக
அவர்கள் பாவம்
செய்யும் சமூகத்தாராகவே
இருக்கின்றார்கள்" (என்றும்
அவருக்கு கூறப்பட்டது).
[28:33]
(அதற்கு
அவர்); "என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில்
ஒருவனைக் கொன்று
விட்டேன்; ஆகையால்
அவர்கள் என்னைக்
கொலை செய்து விடுவார்கள்
என்று பயப்படுகிறேன்" என்று
கூறினார்.
[28:34]
இன்னும்; "என் சகோதரர் ஹாரூன்
- அவர் என்னை விடப்
பேச்சில் மிக்க
தெளிவானவர்; ஆகவே
என்னுடன் உதவியாய் நீ அவரை
அனுப்பி வைப்பாயாக!
என்னை அவர் மெய்ப்பிப்பார்.
நிச்சயமாக, அவர்கள் என்னைப்
பொய்ப்பிப்பார்கள்
என்று நான் பயப்படுகிறேன்" (என்றுங்
கூறினார்).
[28:35]
(அல்லாஹ்)
கூறினான்; "நாம் உம்
கையை உம் சகோதரைக்
கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே
வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள்
உங்களிருவரையும்
நெருங்கவும் முடியாது
நம்முடைய அத்தாட்சிகளைக்
கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும்
மிகைத்து விடுவீர்கள்."