[28:51]

இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.

[28:52]

இதற்கு முன்னர்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.

[28:53]

மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்" என்று கூறுகிறார்கள்.

[28:54]

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.

[28:55]

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து "எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை" என்று கூறுவார்கள்.

[28:56]

(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

[28:57]

இன்னும் அவர்கள்; "நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு வாங்கள் தூக்கி எறியப்படுவோம்" என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

[28:58]

தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை மேலும் நாமே (அவர்களுக்கு) வாரிசுகளாக்கினோம்.

[28:59]

(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.