[28:60]

மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?"

[28:61]

எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?

[28:62]

இன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்; "எனக்கு இணையானவர்கள் என்று. நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே" என்று கேட்பான்.

[28:63]

எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், "எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொள்கிறோம் அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை" என்று கூறுவார்கள்.

[28:64]

உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள் என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையை காண்பார்கள் அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).

[28:65]

மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?" என்றும் கேட்பான்.

[28:66]

ஆனால் அந்நாளில் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் மூடலாகி போகும், ஆகவே, அவர்கள் ஒருவரையெருவர் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்.

[28:67]

ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.

[28:68]

மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.

[28:69]

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.

[28:70]

மேலும்; அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.