[28:85]

(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்" என்று நீர் கூறுவீராக.

[28:86]

இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.

[28:87]

இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.

[28:88]

அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

Al-‘Ankabût

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[29:1]

அலிஃப், லாம், மீம்.

[29:2]

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

[29:3]

நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.

[29:4]

அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.

[29:5]

எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளடடும்) ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சமயாக வருவதாக இருக்கிறது அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

[29:6]

இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.