[30:6]

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[30:7]

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

[30:8]

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

[30:9]

அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.

[30:10]

பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.

[30:11]

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[30:12]

மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.

[30:13]

அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசவதாக இராது (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.

[30:14]

மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

[30:15]

ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.