[30:42]

பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர் என்று (நபியே!) நீர் கூறும்.

[30:43]

ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

[30:44]

எவன் நிராகரிக்கின்றானனோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

[30:45]

ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.

[30:46]

இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.

[30:47]

மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.

[30:48]

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.

[30:49]

எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.

[30:50]

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.