[30:51]

ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.

[30:52]

ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.

[30:53]

இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியது.

[30:54]

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

[30:55]

அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.

[30:56]

ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்; "அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்."

[30:57]

ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.

[30:58]

திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; "நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை" என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்.

[30:59]

அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

[30:60]

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.