[33:44]

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

[33:45]

நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.

[33:46]

இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)

[33:47]

எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!

[33:48]

அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.

[33:49]

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

[33:50]

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.