Saba

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[34:1]

அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.

[34:2]

பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.

[34:3]

எனினும் நிராகரிப்பவர்கள்; "(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.

[34:4]

ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது) அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.

[34:5]

மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.

[34:6]

எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.

[34:7]

ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.