[34:23]

அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று கேட்பார்கள். "உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்" என்று கூறுவார்கள்.

[34:24]

வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்? என்று (நபியே!) நீர் கேளும்; "அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்" என்றும் கூறும்.

[34:25]

நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம் என்றும் கூறுவீராக.

[34:26]

நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன் என்றும் கூறுவீராக.

[34:27]

அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன் என்றும் சொல்லும்.

[34:28]

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[34:29]

இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்; "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று.

[34:30]

(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

[34:31]

இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம் என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்.