[36:55]

அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

[36:56]

அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.

[36:57]

அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.

[36:58]

'ஸலாமுன்' என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.

[36:59]

அன்றியும்; "குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

[36:60]

ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன் என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

[36:61]

என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

[36:62]

அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

[36:63]

இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.

[36:64]

நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

[36:65]

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

[36:66]

நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?

[36:67]

அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.

[36:68]

மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

[36:69]

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.

[36:70]

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.