As-Sâffât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[37:1]

அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,

[37:2]

பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,

[37:3]

(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

[37:4]

நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.

[37:5]

வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.

[37:6]

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

[37:7]

(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).

[37:8]

(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.

[37:9]

(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.

[37:10]

(ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.

[37:11]

ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

[37:12]

(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

[37:13]

அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.

[37:14]

அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.

[37:15]

இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

[37:16]

நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)

[37:17]

அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)

[37:18]

ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

[37:19]

ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.

[37:20]

(அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர்.

[37:21]

நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்! (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)

[37:22]

அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.

[37:23]

அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.

[37:24]

இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)