[38:27]

மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.

[38:28]

அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?

[38:29]

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

[38:30]

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

[38:31]

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது

[38:32]

நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன் என அவர் கூறினார்.

[38:33]

என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார் அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.

[38:34]

இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.

[38:35]

என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய் எனக் கூறினார்.

[38:36]

ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.

[38:37]

மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;

[38:38]

சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).

[38:39]

இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).

[38:40]

மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

[38:41]

மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறிய போது);

[38:42]

உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும் (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) "இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன" (என்று சொன்னோம்).