[38:43]

பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.

[38:44]

ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம் (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.

[38:45]

(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!

[38:46]

நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).

[38:47]

நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.

[38:48]

இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.

[38:49]

இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.

[38:50]

'அத்னு' என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.

[38:51]

அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.

[38:52]

அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

[38:53]

கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

[38:54]

நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[38:55]

இது (நல்லோருக்காக) ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.

[38:56]

(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.

[38:57]

இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.

[38:58]

இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.

[38:59]

(நரகவாதிகளின் தலைவர்களிடம;) "இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்" (என்று கூறப்படும்).

[38:60]

அதற்கு அவர்கள்; "அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!" என்று கூறுவர்.

[38:61]

எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக! என்று அவர்கள் கூறுவர்.