[39:11]

(நபியே! இன்னும்) "மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்" என்றும் கூறுவீராக.

[39:12]

அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவராக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன் (என்றும் நீர் கூறுவீராக).

[39:13]

என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சகிறேன் என்று (நபியே!) நீர் கூறும்.

[39:14]

இன்னும் கூறுவீராக "என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.

[39:15]

ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க."

[39:16]

(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; "என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்."

[39:17]

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!

[39:18]

அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.

[39:19]

(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?

[39:20]

ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியியல் மாற மாட்டான்.

[39:21]

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.