[39:22]

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

[39:23]

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.

[39:24]

எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு "நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்" என்று கூறப்படும்.

[39:25]

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.

[39:26]

இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்

[39:27]

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

[39:28]

(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).

[39:29]

அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

[39:30]

நிச்சயமாக நீரும் மரிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.

[39:31]

பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு)வாது செய்வீர்கள்.