[39:48]

அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

[39:49]

மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[39:50]

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்து எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

[39:51]

ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.

[39:52]

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.

[39:53]

என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

[39:54]

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

[39:55]

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

[39:56]

அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;