[39:57]

அல்லது "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

[39:58]

அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

[39:59]

(பதில் கூறப்படும;) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்."

[39:60]

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?

[39:61]

எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.

[39:62]

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.

[39:63]

வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.

[39:64]

அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா? என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[39:65]

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்).

[39:66]

ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!

[39:67]

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.