[40:41]

என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.

[40:42]

நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.

[40:43]

என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.

[40:44]

எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்" (என்றும் அவர் கூறினார்).

[40:45]

ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.

[40:46]

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).

[40:47]

அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?" என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).

[40:48]

(அப்போது) "நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்" என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.

[40:49]

இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.