[42:16]

எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.

[42:17]

அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?

[42:18]

அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

[42:19]

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

[42:20]

எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.

[42:21]

அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

[42:22]

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.