[46:29]

மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, "மௌனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

[46:30]

(ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) 'வழி' காட்டுகின்றது.

[46:31]

எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.

[46:32]

ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்."

[46:33]

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

[46:34]

மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) "இது உண்மையல்லவா?" (என்று கேட்கப்படும;) அதற்வர்கள், "எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்" என்று கூறுவார்கள். "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான்.

[46:35]

(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?