[48:16]

பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லஹ் உங்களுக்கு அழிகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்" என்று (நபியே!) நீர் கூறும்.

[48:17]

(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை முடவர் மீதும் குற்றம் இல்லை நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.

[48:18]

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

[48:19]

இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

[48:20]

ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).

[48:21]

மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.

[48:22]

நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.

[48:23]

இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.