[58:22]

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.

Al-Hashr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[59:1]

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.

[59:2]

வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே, எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை, அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான், அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.

[59:3]

தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.