[63:5]

இன்னும், "வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.

[63:6]

அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

[63:7]

இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள், (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்" என்று கூறியவர்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை, ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

[63:8]

நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.

[63:9]

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

[63:10]

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.

[63:11]

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.