[64:10]

அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே, அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.

[64:11]

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

[64:12]

ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள், இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.

[64:13]

அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.

[64:14]

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.

[64:15]

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.

[64:16]

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

[64:17]

நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான், அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன், சகிப்பவன்.

[64:18]

மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.