Al-Mulk

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[67:1]

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[67:2]

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

[67:3]

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

[67:4]

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

[67:5]

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

[67:6]

இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.

[67:7]

அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.

[67:8]

அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

[67:9]

அதற்கவர்கள் கூறுவார்கள்; "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை" என்று சொன்னோம்."

[67:10]

இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."

[67:11]

(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

[67:12]

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.