[68:43]

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)

[68:44]

எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.

[68:45]

அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

[68:46]

நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?

[68:47]

அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?

[68:48]

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:

[68:49]

அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.

[68:50]

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.

[68:51]

மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.

[68:52]

ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.

Al-Hâqqah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[69:1]

நிச்சயமானது.

[69:2]

நிச்சயமானது எது?

[69:3]

அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[69:4]

ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

[69:5]

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

[69:6]

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

[69:7]

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

[69:8]

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?