[73:20]

நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

Al-Muddaththir

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[74:1]

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

[74:2]

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

[74:3]

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

[74:4]

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

[74:5]

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.

[74:6]

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.

[74:7]

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.

[74:8]

மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-

[74:9]

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.

[74:10]

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.

[74:11]

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.

[74:12]

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

[74:13]

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

[74:14]

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.

[74:15]

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

[74:16]

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.

[74:17]

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.