[3:62]

நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.

[3:63]

அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

[3:64]

(நபியே! அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

[3:65]

வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?

[3:66]

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

[3:67]

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

[3:68]

நிச்சயமாக மனிதர்களி;ல் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

[3:69]

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.

[3:70]

வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?