At-Târiq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[86:1]

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

[86:2]

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[86:3]

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

[86:4]

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

[86:5]

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

[86:6]

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

[86:7]

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

[86:8]

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

[86:9]

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

[86:10]

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

[86:11]

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

[86:12]

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

[86:13]

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

[86:14]

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

[86:15]

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

[86:16]

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

[86:17]

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

Al-A‘lâ

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[87:1]

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

[87:2]

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

[87:3]

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

[87:4]

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

[87:5]

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

[87:6]

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

[87:7]

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

[87:8]

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

[87:9]

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.

[87:10]

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

[87:11]

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

[87:12]

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

[87:13]

பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

[87:14]

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.