At-Tîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[95:1]

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

[95:2]

'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-

[95:3]

மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

[95:4]

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

[95:5]

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

[95:6]

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

[95:7]

எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

[95:8]

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

Al-‘Alaq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[96:1]

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

[96:2]

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

[96:3]

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

[96:4]

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

[96:5]

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

[96:6]

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

[96:7]

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

[96:8]

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

[96:9]

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

[96:10]

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

[96:11]

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

[96:12]

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

[96:13]

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

[96:14]

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

[96:15]

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

[96:16]

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

[96:17]

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

[96:18]

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

[96:19]

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.