[3:92]

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

[3:93]

இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக்காண்பியுங்கள்" என்று.

[3:94]

இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.

[3:95]

(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை."

[3:96]

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

[3:97]

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான்.

[3:98]

வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே! என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[3:99]

வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

[3:100]

நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.