Part 21

 

[29:46]

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக.

[29:47]

இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

[29:48]

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.

[29:49]

அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

[29:50]

அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை? என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[29:51]

அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.

[29:52]

எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள் என்று (நபியே!) நீர் கூறும்.

[29:53]

இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.

[29:54]

அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.

[29:55]

அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) "நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.

[29:56]

ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.

[29:57]

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.

[29:58]

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.

[29:59]

(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

[29:60]

அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

[29:61]

மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?

[29:62]

அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.

[29:63]

இன்னும், அவர்களிடம்; "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில்; "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.

[29:64]

இன்னும், இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.

[29:65]

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.

[29:66]

அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.

[29:67]

அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

[29:68]

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,

[29:69]

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.

 

Ar-Rûm

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[30:1]

அலிஃப், லாம், மீம்.

[30:2]

ரோம் தோல்வியடைந்து விட்டது.

[30:3]

அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.

[30:4]

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள்.

[30:5]

அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.

[30:6]

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[30:7]

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

[30:8]

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

[30:9]

அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.

[30:10]

பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.

[30:11]

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[30:12]

மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.

[30:13]

அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசவதாக இராது (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.

[30:14]

மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

[30:15]

ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.

[30:16]

இன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களை, மறுமையின் சந்திபபையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

[30:17]

ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்.

[30:18]

இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).

[30:19]

அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

[30:20]

மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

[30:21]

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

[30:22]

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

[30:23]

இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[30:24]

அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.

[30:25]

வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.

[30:26]

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

[30:27]

அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

[30:28]

உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்; உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக் அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.

[30:29]

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.

[30:30]

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[30:31]

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.

[30:32]

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்.

[30:33]

மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இறை வைக்கின்றனர்.

[30:34]

நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்களை நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[30:35]

அல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா?

[30:36]

இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.

[30:37]

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[30:38]

ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.

[30:39]

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

[30:40]

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.

[30:41]

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.

[30:42]

பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர் என்று (நபியே!) நீர் கூறும்.

[30:43]

ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

[30:44]

எவன் நிராகரிக்கின்றானனோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

[30:45]

ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.

[30:46]

இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.

[30:47]

மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.

[30:48]

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.

[30:49]

எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.

[30:50]

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

[30:51]

ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.

[30:52]

ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.

[30:53]

இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியது.

[30:54]

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

[30:55]

அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.

[30:56]

ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்; "அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்."

[30:57]

ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.

[30:58]

திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; "நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை" என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்.

[30:59]

அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

[30:60]

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.

 

Luqmân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[31:1]

அலிஃப், லாம், மீம்.

[31:2]

இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

[31:3]

(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

[31:4]

அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

[31:5]

இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

[31:6]

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.

[31:7]

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக்க காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனே போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.

[31:8]

நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.

[31:9]

அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

[31:10]

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

[31:11]

இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

[31:12]

இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். "அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".

[31:13]

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

[31:14]

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."

[31:15]

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."

[31:16]

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

[31:17]

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக் நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்

[31:18]

(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

[31:19]

உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.

[31:20]

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.

[31:21]

அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் "(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

[31:22]

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காhயங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.

[31:23]

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.

[31:24]

அவர்களை நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர் நாம் அவர்களை மிகவும் கடுமையான வேதனையில் (புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.

[31:25]

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ்" என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே" என்று நீர் கூறுவீராக் எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

[31:26]

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.

[31:27]

மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

[31:28]

(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.

[31:29]

நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள செய்பவற்றை நன்கறிபவன்.

[31:30]

எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.

[31:31]

தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சமயாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[31:32]

(கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.

[31:33]

மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.

[31:34]

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

 

As-Sajdah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[32:1]

அலிஃப், லாம், மீம்.

[32:2]

அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமே இல்லை.

[32:3]

ஆயினும் அவர்கள் "இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்" என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல, எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).

[32:4]

அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

[32:5]

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

[32:6]

அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.

[32:7]

அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.

[32:8]

பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.

[32:9]

பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.

[32:10]

நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா? எனவும் அவர்கள் கூறுகின்றனர்; ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.

[32:11]

உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.

[32:12]

மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், "எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

[32:13]

மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் "நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.

[32:14]

ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

[32:15]

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.

[32:16]

அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.

[32:17]

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.

[32:18]

எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.

[32:19]

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உப சரிக்கப்படுவார்கள்).

[32:20]

ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

[32:21]

மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.

[32:22]

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.

[32:23]

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.

[32:24]

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.

[32:25]

அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.

[32:26]

இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க மாட்டார்களா?

[32:27]

அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?

[32:28]

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)? என்று அவர்கள் கூறுகிறார்கள்.

[32:29]

அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுகு;குத்தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.

[32:30]

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.

 

Al-Ahzâb

 

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[33:1]

நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

[33:2]

இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

[33:3]

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

[33:4]

இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

[33:5]

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

[33:6]

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

[33:7]

(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

[33:8]

எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

[33:9]

முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

[33:10]

உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.

[33:11]

அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.

[33:12]

மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள்.

[33:13]

மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்; "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.

[33:14]

அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.

[33:15]

எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.

[33:16]

மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[33:17]

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[33:18]

உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்து விடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.

[33:19]

(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.

[33:20]

அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.

[33:21]

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

[33:22]

அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

[33:23]

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.

[33:24]

உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

[33:25]

நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

[33:26]

இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.

[33:27]

இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

[33:28]

நபியே! உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.

[33:29]

ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான் என்றும் கூறுவீராக!

[33:30]

நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!