Part 26

 

Al-Ahqâf

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[46:1]

ஹா, மீம்.

[46:2]

இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

[46:3]

வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.

[46:4]

நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[46:5]

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.

[46:6]

அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.

[46:7]

மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், "இது தெளிவான சூனியமே!" என்றும் கூறுகிறார்கள்.

[46:8]

அல்லது, "இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக "நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்" என்று (நபியே! நீர் கூறும்).

[46:9]

(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை என்று (நபியே!) நீர் கூறும்.

[46:10]

இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா? என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.

[46:11]

நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி; "இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது "இது பண்டைக்காலக் கட்டுக் கதை" எனக் கூறுவார்கள்.

[46:12]

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

[46:13]

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[46:14]

அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.

[46:15]

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்.

[46:16]

சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.

[46:17]

ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) "உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது" என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகிறான்.

[46:18]

இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.

[46:19]

அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[46:20]

அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[46:21]

மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.

[46:22]

அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.

[46:23]

அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.

[46:24]

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது

[46:25]

அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும் (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

[46:26]

உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

[46:27]

அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.

[46:28]

(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியதையும், இட்டுக் கட்டியவையுமாகும்.

[46:29]

மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, "மௌனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

[46:30]

(ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) 'வழி' காட்டுகின்றது.

[46:31]

எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.

[46:32]

ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்."

[46:33]

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

[46:34]

மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) "இது உண்மையல்லவா?" (என்று கேட்கப்படும்;) அதற்வர்கள், "எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்" என்று கூறுவார்கள். "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான்.

[46:35]

(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?

 

Muhammad

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 

[47:1]

 

எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.

[47:2]

 

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான்.

[47:3]

 

இது ஏனெனில்; நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.

[47:4]

 

(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

[47:5]

 

அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.

[47:6]

 

மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.

[47:7]

 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.

[47:8]

 

அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.

[47:9]

 

ஏனெனில்; அல்லாஹ் இற்ககிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.

[47:10]

 

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.

[47:11]

 

இது ஏனெனில்; அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.

[47:12]

 

நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.

[47:13]

 

மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.

[47:14]

 

எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?

[47:15]

 

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

[47:16]

இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.

[47:17]

மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.

[47:18]

எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.

[47:19]

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

[47:20]

இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்; "(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?" என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதேதா அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.

[47:21]

(ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

[47:22]

(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடுவும் முனைவீர்களோ?

[47:23]

இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.

[47:24]

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

[47:25]

நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

[47:26]

இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.

[47:27]

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,

[47:28]

இது ஏனெனில்; நிச்சயமாக இவர்கள் அல்லஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.

[47:29]

அல்லது எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?

[47:30]

அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்களை செய்கைகளை நன்கறிகிறான்.

[47:31]

அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).

[47:32]

நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கன்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.

[47:33]

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.

[47:34]

நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

[47:35]

(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.

[47:36]

திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.

[47:37]

அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான்.

[47:38]

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

 

Al-Fath

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[48:1]

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்

[48:2]

உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.

[48:3]

மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்)

[48:4]

அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்னோன்.

[48:5]

முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களின் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்) அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான் வெற்றியாகும்.

[48:6]

அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.

[48:7]

அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

[48:8]

நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.

[48:9]

(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).

[48:10]

நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.

[48:11]

(நபியே! போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்; "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!" எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும்.

[48:12]

(நீங்கள் கூறுவது போல்) அல்ல (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடம்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.

[48:13]

அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.

[48:14]

மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

[48:15]

போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர அனுமதி கொடுங்கள்" என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; "நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்" என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக ஆனால், அவர்கள்; "அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்" எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.

[48:16]

பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லஹ் உங்களுக்கு அழிகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்" என்று (நபியே!) நீர் கூறும்.

[48:17]

(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை முடவர் மீதும் குற்றம் இல்லை நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.

[48:18]

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

[48:19]

இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

[48:20]

ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).

[48:21]

மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.

[48:22]

நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.

[48:23]

இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.

[48:24]

இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.

[48:25]

மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்து காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.

[48:26]

 

(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

[48:27]

 

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,

[48:28]

 

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.

[48:29]

 

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

 

Al-Hujurât

 

 

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 

[49:1]

 

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.

[49:2]

 

முஃமினகளே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.

[49:3]

 

நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.

[49:4]

 

(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!

[49:5]

 

நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

[49:6]

 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

[49:7]

 

அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.

[49:8]

 

(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.

[49:9]

 

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

[49:10]

 

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.

[49:11]

 

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

[49:12]

 

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

[49:13]

 

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

[49:14]

 

நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

[49:15]

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

[49:16]

நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன் என்று (நபியே!) நீர் கூறும்.

[49:17]

அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[49:18]

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

 

Qâf

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 [50:1]

காஃப், கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக!

[50:2]

எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்."

[50:3]

நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).

[50:4]

(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

[50:5]

இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.

[50:6]

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

[50:7]

மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

[50:8]

(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.

[50:9]

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.

[50:10]

அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).

[50:11]

(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.

[50:12]

இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.

[50:13]

'ஆது' (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).

[50:14]

(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.

[50:15]

எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.

[50:16]

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

[50:17]

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

[50:18]

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

[50:19]

மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

[50:20]

மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.

[50:21]

அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.

[50:22]

நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது. (என்று கூறப்படும்).

[50:23]

அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார்.

[50:24]

மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.

[50:25]

 

(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.

[50:26]

ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்).

[50:27]

(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-"

[50:28]

என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன் என்று (அல்லாஹ்) கூறுவான்.

[50:29]

(எனவே என்னுடைய) அச்சொல் "என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்).

[50:30]

நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

[50:31]

(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

[50:32]

இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).

[50:33]

எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).

[50:34]

ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும் (என்று கூறப்படும்).

[50:35]

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.

[50:36]

அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?

[50:37]

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

[50:38]

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.

[50:39]

எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.

[50:40]

இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.

[50:41]

மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

[50:42]

அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.

[50:43]

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.

[50:44]

பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.

[50:45]

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.

 

Adh-Dhâriyât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[51:1]

(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!

[51:2]

(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,

[51:3]

பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,

[51:4]

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக

[51:5]

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.

[51:6]

அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.

[51:7]

அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

[51:8]

நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.

[51:9]

அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

[51:10]

பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

[51:11]

வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.

[51:12]

(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.

[51:13]

நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).

[51:14]

உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள், எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.

[51:15]

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

[51:16]

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

[51:17]

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.

[51:18]

அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.

[51:19]

அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.

[51:20]

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

[51:21]

உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

[51:22]

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.

[51:23]

ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.

[51:24]

இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

[51:25]

அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).

[51:26]

எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.

[51:27]

அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.

[51:28]

(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.

[51:29]

பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.

[51:30]

(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.