Part 30

 

An-Naba’

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[78:1]

எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

[78:2]

மகத்தான அச்செய்தியைப் பற்றி,

[78:3]

எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

[78:4]

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

[78:5]

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

[78:6]

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

[78:7]

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

[78:8]

இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

[78:9]

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

[78:10]

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

[78:11]

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

[78:12]

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

[78:13]

ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

[78:14]

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

[78:15]

அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

[78:16]

(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

[78:17]

நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

[78:18]

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

[78:19]

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

[78:20]

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

[78:21]

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

[78:22]

வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

[78:23]

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

[78:24]

அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

[78:25]

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

[78:26]

(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

[78:27]

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

[78:28]

அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

[78:29]

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

[78:30]

ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம் (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[78:31]

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

[78:32]

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

[78:33]

ஒரே வயதுள்ள கன்னிகளும்.

[78:34]

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

[78:35]

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

[78:36]

(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

[78:37]

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

[78:38]

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

[78:39]

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

[78:40]

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

 

An-Nâzi‘ât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[79:1]

(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

[79:2]

(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

[79:3]

வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

[79:4]

முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

[79:5]

ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

[79:6]

பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;

[79:7]

அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

[79:8]

அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

[79:9]

அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

[79:10]

நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா? என்று கூறுகிறார்கள்.

[79:11]

மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?

[79:12]

அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும் என்றும் கூறுகின்றார்கள்.

[79:13]

ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

[79:14]

அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

[79:15]

(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

[79:16]

'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

[79:17]

நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.

[79:18]

இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.

[79:19]

அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய் (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

[79:20]

ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

[79:21]

ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

[79:22]

பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

[79:23]

அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

[79:24]

நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா என்று (அவர்களிடம்) கூறினான்.

[79:25]

இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

[79:26]

நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

[79:27]

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

[79:28]

அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

[79:29]

அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

[79:30]

இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

[79:31]

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

[79:32]

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

[79:33]

உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

[79:34]

எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

[79:35]

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

[79:36]

அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

[79:37]

எனவே, எவன் வரம்பை மீறினானோ -

[79:38]

இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

[79:39]

அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

[79:40]

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

[79:41]

நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

[79:42]

(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

[79:43]

அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

[79:44]

அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

[79:45]

அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

[79:46]

நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

 

‘Abasa

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[80:1]

அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

[80:2]

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

[80:3]

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

[80:4]

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

[80:5]

(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

[80:6]

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

[80:7]

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

[80:8]

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

[80:9]

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

[80:10]

அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

[80:11]

அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

[80:12]

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

[80:13]

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

[80:14]

உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

[80:15]

(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

[80:16]

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

[80:17]

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

[80:18]

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

[80:19]

(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

[80:20]

பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

[80:21]

பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

[80:22]

பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

[80:23]

(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

[80:24]

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

[80:25]

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

[80:26]

பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

[80:27]

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

[80:28]

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

[80:29]

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

[80:30]

அடர்ந்த தோட்டங்களையும்,

[80:31]

பழங்களையும், தீவனங்களையும்-

[80:32]

(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

[80:33]

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

[80:34]

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

[80:35]

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

[80:36]

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

[80:37]

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

[80:38]

அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

[80:39]

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

[80:40]

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

[80:41]

அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

[80:42]

அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

 

At-Takwîr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[81:1]

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

[81:2]

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

[81:3]

மலைகள் பெயர்க்கப்படும் போது-

[81:4]

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

[81:5]

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

[81:6]

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

[81:7]

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

[81:8]

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

[81:9]

எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது? என்று-

[81:10]

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

[81:11]

வானம் அகற்றப்படும் போது-

[81:12]

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

[81:13]

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

[81:14]

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

[81:15]

எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

[81:16]

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

[81:17]

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

[81:18]

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

[81:19]

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

[81:20]

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

[81:21]

(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

[81:22]

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

[81:23]

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

[81:24]

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

[81:25]

அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

[81:26]

எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

[81:27]

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

[81:28]

உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

[81:29]

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

 

Al-Infitâr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[82:1]

வானம் பிளந்து விடும்போது

[82:2]

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

[82:3]

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

[82:4]

கப்றுகள் திறக்கப்படும் போது,

[82:5]

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

[82:6]

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

[82:7]

அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.

[82:8]

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

[82:9]

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

[82:10]

நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

[82:11]

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

[82:12]

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

[82:13]

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

[82:14]

இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

[82:15]

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

[82:16]

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

[82:17]

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

[82:18]

பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

[82:19]

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

 

Al-Mutaffifîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[83:1]

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

[83:2]

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

[83:3]

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

[83:4]

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

[83:5]

மகத்தான ஒரு நாளுக்காக,

[83:6]

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

[83:7]

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

[83:8]

'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

[83:9]

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.

[83:10]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[83:11]

அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

[83:12]

வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

[83:13]

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.

[83:14]

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.

[83:15]

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

[83:16]

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

[83:17]

எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.

[83:18]

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.

[83:19]

இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

[83:20]

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

[83:21]

(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.

[83:22]

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

[83:23]

ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.

[83:24]

அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

[83:25]

(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.

[83:26]

அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

[83:27]

இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.

[83:28]

அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

[83:29]

நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

[83:30]

அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.

[83:31]

இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.

[83:32]

மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.

[83:33]

(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!

[83:34]

ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

[83:35]

ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.

[83:36]

காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)

 

Al-Inshiqâq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[84:1]

வானம் பிளந்துவிடும் போது

[84:2]

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-

[84:3]

இன்னும், பூமி விரிக்கப்பட்டு,

[84:4]

அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-

[84:5]

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.

[84:6]

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.

[84:7]

ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

[84:8]

அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

[84:9]

இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

[84:10]

ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-

[84:11]

அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-

[84:12]

அவன் நரகத்தில் புகுவான்.

[84:13]

நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

[84:14]

நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.

[84:15]

அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.

[84:16]

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[84:17]

மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

[84:18]

பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

[84:19]

நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.

[84:20]

எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.

[84:21]

மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

[84:22]

அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.

[84:23]

ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.

[84:24]

(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.

[84:25]

எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

 

Al-Burûj

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[85:1]

கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

[85:2]

இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,

[85:3]

மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

[85:4]

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

[85:5]

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).

[85:6]

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,

[85:7]

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

[85:8]

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

[85:9]

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

[85:10]

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

[85:11]

ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.

[85:12]

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

[85:13]

நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

[85:14]

அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

[85:15]

(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.

[85:16]

தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

[85:17]

(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,

[85:18]

ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,

[85:19]

எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

[85:20]

ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

[85:21]

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

[85:22]

(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

 

At-Târiq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[86:1]

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

[86:2]

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[86:3]

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

[86:4]

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

[86:5]

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

[86:6]

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

[86:7]

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

[86:8]

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

[86:9]

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

[86:10]

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

[86:11]

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

[86:12]

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

[86:13]

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

[86:14]

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

[86:15]

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

[86:16]

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

[86:17]

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

 

Al-A‘lâ

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[87:1]

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

[87:2]

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

[87:3]

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

[87:4]

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

[87:5]

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

[87:6]

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

[87:7]

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

[87:8]

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

[87:9]

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.

[87:10]

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

[87:11]

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

[87:12]

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

[87:13]

பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

[87:14]

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

[87:15]

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.

[87:16]

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

[87:17]

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.

[87:18]

நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-

[87:19]

இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

 

Al-Ghâshiyah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[88:1]

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

[88:2]

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

[88:3]

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

[88:4]

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

[88:5]

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

[88:6]

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

[88:7]

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

[88:8]

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

[88:9]

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

[88:10]

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

[88:11]

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

[88:12]

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

[88:13]

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

[88:14]

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

[88:15]

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

[88:16]

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

[88:17]

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

[88:18]

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

[88:19]

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

[88:20]

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

[88:21]

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

[88:22]

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

[88:23]

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

[88:24]

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

[88:25]

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

[88:26]

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

 

Al-Fajr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[89:1]

விடியற் காலையின் மீது சத்தியமாக,

[89:2]

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

[89:3]

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

[89:4]

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

[89:5]

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

[89:6]

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

[89:7]

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,

[89:8]

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

[89:9]

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)

[89:10]

மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

[89:11]

அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

[89:12]

அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

[89:13]

எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.

[89:14]

நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.

[89:15]

ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.

[89:16]

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.

[89:17]

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

[89:18]

ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

[89:19]

இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

[89:20]

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

[89:21]

அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

[89:22]

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,

[89:23]

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

[89:24]

என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே! என்று அப்போது மனிதன் கூறுவான்.

[89:25]

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

[89:26]

மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

[89:27]

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

[89:28]

நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

[89:29]

நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

[89:30]

மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

 

Al-Balad

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[90:1]

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[90:2]

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

[90:3]

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

[90:4]

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

[90:5]

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

[90:6]

ஏராளமான பொருளை நான் அழித்தேன் என்று அவன் கூறுகிறான்.

[90:7]

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

[90:8]

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

[90:9]

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

[90:10]

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

[90:11]

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

[90:12]

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

[90:13]

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

[90:14]

அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

[90:15]

உறவினனான ஓர் அநாதைக்கோ,

[90:16]

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

[90:17]

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

[90:18]

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

[90:19]

ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

[90:20]

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

 

Ash-Shams

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[91:1]

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

[91:2]

(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

[91:3]

(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

[91:4]

(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

[91:5]

வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

[91:6]

பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

[91:7]

ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

[91:8]

அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

[91:9]

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

[91:10]

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

[91:11]

'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

[91:12]

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

[91:13]

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

[91:14]

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

[91:15]

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

 

Al-Layl

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[92:1]

(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

[92:2]

பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

[92:3]

ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

[92:4]

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

[92:5]

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

[92:6]

நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

[92:7]

அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

[92:8]

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

[92:9]

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

[92:10]

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

[92:11]

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

[92:12]

நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.

[92:13]

அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

[92:14]

ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

[92:15]

மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

[92:16]

எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

[92:17]

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

[92:18]

(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

[92:19]

மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

[92:20]

மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).

[92:21]

வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

 

Ad-Dhuhâ

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[93:1]

முற்பகல் மீது சத்தியமாக

[93:2]

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

[93:3]

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

[93:4]

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

[93:5]

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

[93:6]

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

[93:7]

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

[93:8]

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

[93:9]

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.

[93:10]

யாசிப்போரை விரட்டாதீர்.

[93:11]

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

 

Al-Sharh

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[94:1]

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

[94:2]

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

[94:3]

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.

[94:4]

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

[94:5]

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

[94:6]

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

[94:7]

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

[94:8]

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

 

At-Tîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[95:1]

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

[95:2]

'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-

[95:3]

மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

[95:4]

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

[95:5]

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

[95:6]

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

[95:7]

எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

[95:8]

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

 

Al-‘Alaq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[96:1]

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

[96:2]

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

[96:3]

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

[96:4]

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

[96:5]

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

[96:6]

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

[96:7]

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

[96:8]

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

[96:9]

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

[96:10]

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

[96:11]

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

[96:12]

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

[96:13]

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

[96:14]

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

[96:15]

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

[96:16]

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

[96:17]

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

[96:18]

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

[96:19]

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

 

Al-Qadr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[97:1]

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

[97:2]

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

[97:3]

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.

[97:4]

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

[97:5]

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

 

Al-Bayyinah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[98:1]

வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

[98:2]

(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

[98:3]

அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

[98:4]

எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.

[98:5]

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.

[98:6]

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

[98:7]

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.

[98:8]

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

 

Al-Zalzalah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[99:1]

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

[99:2]

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

[99:3]

அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது-

[99:4]

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

[99:5]

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

[99:6]

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

[99:7]

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

[99:8]

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

 

Al-‘Adiyât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[100:1]

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

[100:2]

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

[100:3]

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

[100:4]

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

[100:5]

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

[100:6]

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

[100:7]

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

[100:8]

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

[100:9]

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

[100:10]

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

[100:11]

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.

 

Al-Qâri‘ah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[101:1]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

[101:2]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

[101:3]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

[101:4]

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

[101:5]

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

[101:6]

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

[101:7]

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

[101:8]

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

[101:9]

அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.

[101:10]

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

[101:11]

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

 

At-Takâthur

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[102:1]

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-

[102:2]

நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.

[102:3]

அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[102:4]

பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[102:5]

அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

[102:6]

நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

[102:7]

பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.

[102:8]

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

 

Al-‘Asr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[103:1]

காலத்தின் மீது சத்தியமாக.

[103:2]

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

[103:3]

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

 

Al-Humazah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[104:1]

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

[104:2]

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

[104:3]

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

[104:4]

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

[104:5]

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

[104:6]

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

[104:7]

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

[104:8]

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

[104:9]

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

 

Al-Fîl

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[105:1]

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

[105:2]

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

[105:3]

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

[105:4]

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

[105:5]

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

 

Quraysh

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[106:1]

குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,

[106:2]

மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-

[106:3]

இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

[106:4]

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

 

Al-Mâ‘ûn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[107:1]

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

[107:2]

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

[107:3]

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

[107:4]

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

[107:5]

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

[107:6]

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

[107:7]

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

 

Al-Kawthar

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[108:1]

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

[108:2]

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

[108:3]

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

 

Al-Kâfirûn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[109:1]

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!

[109:2]

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

[109:3]

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

[109:4]

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

[109:5]

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

[109:6]

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

 

An-Nasr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[110:1]

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

[110:2]

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

[110:3]

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

 

Al-Masad

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[111:1]

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

[111:2]

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

[111:3]

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

[111:4]

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

[111:5]

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

 

Al-Ikhlâs

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[112:1]

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

[112:2]

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

[112:3]

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

[112:4]

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

 

Al-Falaq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[113:1]

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

[113:2]

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

[113:3]

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

[113:4]

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

[113:5]

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

 

An-Nâs

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[114:1]

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

[114:2]

(அவனே) மனிதர்களின் அரசன்;

[114:3]

(அவனே) மனிதர்களின் நாயன்.

[114:4]

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

[114:5]

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

[114:6]

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.