1. நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக் கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்)என் திருப்பொருத்தத்தை விரும்பி, என் பாதையில் போர் புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறியிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார்.
Tamil Translation - Omar Sharif
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நம்பிக்கையாளர்களே! எனது எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துகின்ற (உங்கள்) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் வந்த சத்தியத்தை அவர்கள் திட்டமாக நிராகரித்தனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் தூதரையும் உங்களையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) அவர்கள் வெளியேற்றுகின்றனர். நீங்கள் எனது பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும் என் பொருத்தத்தை தேடியும் வெளியேறி இருந்தால் (அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!). அவர்களிடம் இரகசியமாக அன்பை காட்டுகின்றீர்களா? நீங்கள் மறைப்பதையும் நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். உங்களில் யார் அதைச் செய்வாரோ (-அல்லாஹ்வின் எதிரிகளை தனது நண்பர்களாக எடுத்துக் கொள்வாரோ) திட்டமாக அவர் நேரான பாதையை விட்டு வழி கெட்டுவிட்டார்.
2. அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
Tamil Translation - Omar Sharif
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள். இன்னும், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். இன்னும், நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
3. (அவர்களுடன் இருக்கும்) உங்கள் சந்ததிகளும், உங்கள் பந்துத்துவமும் மறுமைநாளில் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் (அல்லாஹ்விடம்) உங்களுக்கு அறவே பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
4. இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்),
Tamil Translation - Omar Sharif
இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கிற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கிற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் (-இப்ராஹீமும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்) தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும், இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதைத் தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தனது தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீட்சி இருக்கிறது.”
Tamil Translation - Omar Sharif - Abridged Version
திட்டமாக இப்ராஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கின்ற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கின்ற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும் இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதை தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீளுமிடம் இருக்கின்றது.
5. ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்.
Tamil Translation - Omar Sharif
“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை தண்டித்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
Tamil Translation - Omar Sharif - Abridged Version
“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை வேதனை செய்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
6. நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகிற உங்களுக்கு இவர்களில் அழகான முன்னுதாரணம் இருக்கிறது. எவர் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களின்) தேவையற்றவன், மிக புகழுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
உங்களுக்கு - (அதாவது,) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசைவைப்பவராக (அஞ்சுகிறவர்களாக) இருப்பவர்களுக்கு - அவர்களிடம் (-இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன், நிறைவானவன், மகா புகழுக்குரியவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்களுக்கு - (அதாவது) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைப்பவராக இருப்பவருக்கு- அவர்களிடம் (இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் அவன் முற்றிலும் தேவையற்றவன், மகா புகழுக்குரியவன்.
7. உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.
Tamil Translation - Omar Sharif
எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, இன்னும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் (அதாவது,) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் -(அதாவது) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும்- அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.
9. அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான். அதாவது, அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு துணைபோவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கிறான்). அவர்களை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான் -அதாவது அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு உதவுவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கின்றான்). அவர்களை யார் நேசிக்கின்றார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
10. நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான (–நம்பிக்கை கொண்ட) பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை (-இறைநம்பிக்கையை) மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை நம்பிக்கை கொண்ட முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (-அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (உங்கள் உரிமையில்) தடுத்து வைக்காதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். (நீங்கள் அதை கொடுத்து விடுங்கள்!) இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான பெண்கள் ஹிஜ்ரா செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை - இறைநம்பிக்கையை- மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (தொடர்ந்து) வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரா சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
11. உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கைகொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்று விட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharif
உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம் மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் எந்த அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம்மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் அந்த மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் நம்பிக்கைகொள்கின்ற அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
12. நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை, தங்கள் கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்று உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களை) அல்லாஹ்விடம் மன்னிக்கக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;) நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நபியே! முஃமினான பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், திருட மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள், தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள், தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள். (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறக்கூடாது), நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக உம்மிடம் அவர்கள் வந்தால் நீங்கள் அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
13. நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப்பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
Tamil Translation - Omar Sharif
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசி(த்து உங்கள் நண்பர்களாக ஆ)க்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசிக்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்.